2010/02/15

அலைகள்

கனவுகளின் சிதைந்த முகத்துடனேயே
நான் சுற்றித் திரிகிறேன்.
ஒவ்வொரு இரவுகளும் புதியதோர்
கனவுகளை சுமந்து செல்கின்றன.
ஒவ்வொரு பொழுதுகளும்
கனவுகளின் சிதைந்த முகத்தை
என் கண்ணாடி சன்னலில்
துப்பிச் செல்கின்றன.
இரவுகளின் கருப்பு வீதியில்
உன் காதல் மட்டுமே
விண்மீனாய் காட்சியளிக்கின்றன.
தனிமையில் நடக்கையில்
துணையாய் ஒளி தந்த விண்மீன்
கண்ணீரை அகற்ற
கரம் விரித்த விண்மீன்
வீதியின் நிறம் மாறுகையில்
கரைந்து போனதேன்.
என் சலன இரவுகளெல்லாம்
இன்று மௌனமானதேன்
கனவுகளை சுமந்த என் இரவுகள்
வெறுமையில் நகர்வதேன்.
உடலெங்கும் இரவுகளின் நிறம்
படர்கையில் எதிர் சுவற்றின் மீது
சர்ப்பமாய் நகர்ந்து செல்கிறது
மீண்டுமொரு கனவு .

No comments:

Post a Comment