2010/05/18

பறவை கவிதைகள்

பெயர் தெரியாத
அப்பறவையின்
ஒவ்வொரு சிறகசைவிலும்
காற்று என்னை
கவ்விச்செல்கிறது.

----------------------------------

எதுவுமற்ற
வான்வெளியை
எதுவாகவோ
நிரப்புகிறது
ஒரு பறவை.

----------------------------------
எங்கோ பிரிந்த
தன் துணையைத் தேடி
என் சன்னலோரம்
சதா காத்துக்கொண்டிருக்கிறது
ஒரு பறவை.

2010/03/22

?

விநோத கட்டிலின் கால்களுக்குள்
முடங்கிக் கிடக்கும்
தகப்பனின் மூப்பில்
கரைந்து கொண்டிருக்கிறது
என் குழந்தைப் பருவம்.

2010/02/18

பிறை நிலா

மசூதி தெருவின் தேங்கிய மழைநீரில்
பிரதிபலிப்பது பிறை நிலாவென்றறிந்திராத
நாய் ஒன்று தன் காலை தூக்கியபடியே
மூத்திரம் பெய்து கொண்டிருந்தது.
பிறை நிலா
கு
----றை நிலா
ஆனது.

2010/02/15

அலைகள்

கனவுகளின் சிதைந்த முகத்துடனேயே
நான் சுற்றித் திரிகிறேன்.
ஒவ்வொரு இரவுகளும் புதியதோர்
கனவுகளை சுமந்து செல்கின்றன.
ஒவ்வொரு பொழுதுகளும்
கனவுகளின் சிதைந்த முகத்தை
என் கண்ணாடி சன்னலில்
துப்பிச் செல்கின்றன.
இரவுகளின் கருப்பு வீதியில்
உன் காதல் மட்டுமே
விண்மீனாய் காட்சியளிக்கின்றன.
தனிமையில் நடக்கையில்
துணையாய் ஒளி தந்த விண்மீன்
கண்ணீரை அகற்ற
கரம் விரித்த விண்மீன்
வீதியின் நிறம் மாறுகையில்
கரைந்து போனதேன்.
என் சலன இரவுகளெல்லாம்
இன்று மௌனமானதேன்
கனவுகளை சுமந்த என் இரவுகள்
வெறுமையில் நகர்வதேன்.
உடலெங்கும் இரவுகளின் நிறம்
படர்கையில் எதிர் சுவற்றின் மீது
சர்ப்பமாய் நகர்ந்து செல்கிறது
மீண்டுமொரு கனவு .

2010/01/17

?

இருள் பெருகிய
எனது அநேக
இரவுகளில்
மெதுவாய் என்னை
விழுங்கிக்கொண்டிருக்கிறது
தனிமையும்
உனது நினைவுகளும்.

2010/01/09

தை...

இரும்பு முனையில்
ஈழத் தமிழர்கள்
கரும்பு முனையில்
இந்தியத் தமிழர்கள்.