2009/11/27

நட்பு...

குறைந்த ஒளியில்
நடக்கையில்
அதிக ஒளி கொண்டு
தொடரும் நிழல்.

2009/11/23

இறப்பு

தனிமைத்துயர்
விரும்பாத
பறவையொன்று
கூடுபிரிந்து காற்றுடைத்து
வழியெங்கும் இறகு
உதிர்த்துச்செல்கிறது.

2009/11/02

கரிப்பு

இருள் படர்ந்த கரிசல் மணலில்
வினோத ஒலி எழுப்பும் காற்று
என் மனதின் ஆழ்ந்த நிசப்தத்தை
சற்றே சலனப்படுத்திச் செல்கிறது.
பேருந்தின் கண்ணாடி சன்னலில்
கசிந்தொழுகும் மழைத்துளி
என் நினைவுகளை களவாடுகிறது.
எவளுடைய கண்ணீரையோ
சுமந்த சன்னல் கம்பிகள்
அதன் கரிப்பை எனக்குள்
புகுத்திக் கொண்டே இருக்கிறது.