2009/10/29

தேய்பிறைப் பொழுதுகள்

1. உன் பாதச்சுவட்டில்
இதயம் நட்டுவைத்தேன்
மிதித்து மீண்டும் சுவடாக்கினாய்
எஞ்சிய உயிரையும்
நட்டுவைக்கிறேன்.

2. நீ
நட்டுவைத்த செடியில்
பூ பூக்க மறுக்கிறது
என் கண்ணீரை
ஊற்றியபோதும்.

3. உன் அழைப்பிற்கு
காத்திருக்கையில்
நீ மட்டும்
அழைப்பதேயில்லை

4. நான் வசிப்பது
உன் ஒற்றைப் புன்னகையில்
நீ வசிப்பது
என் கண்ணீர்த் துளிகளில்

5. மனமின்றித் தான்
பிரிந்தேன்
மனதை உன்னிடம்
கொடுத்துவிட்டு.

6. நீ கண்பார்க்கும்
வேளையில்
நான் தொலைந்து போகிறேன்.

7. பூக்களைச்
சுற்றும் வண்டு
உன்னைச்
சுற்றும் நான்.

8. உனக்கு
மழையைப் பிடிப்பதனால்
மழை
விரும்பாதவன் நான்.

9. நான்
அழுதாலும் சிரித்தாலும்
மௌனம் மட்டுமே
உன் பதிலாய்
இருக்கிறது.

10. பொன்மொழிகளுடன்
உறங்கச் சொல்லி வருகிறது
உன் குறுஞ்செய்தி
அதற்குப் பின்
நான் எங்கே உறங்குவது.

2009/10/25

துளி

கவிதை -
ஒரு
துளியில்
இணையும்
இன்னொரு
துளி.

அற்றல்

கொடுத்துத் தீர்ந்த
கையோடு
யாசகம் கேட்டு வந்த
வயோதிகனிடம்
"இல்லை" என
பலமுறை சொல்லியும்
புரிந்ததாகத் தெரியவில்லை
பணம் தர
என்னிடம் மனம்
இல்லையென்பது.

2009/10/24

எச்சம்

அடர் மரமும் பழுத்த காய்களும்
படர் புல்வெளியுமாய்
செழித்திருந்த வனத்துக்குள்
வேலி தாண்டாமல்
தன்னிடத்தே வாழ்ந்து
துள்ளித் திரிந்தன புள்ளி மான்கள்.
செழித்த வனத்துக்குள்
வன்புணர் தரிக்க எத்தனித்தன
இவ்வேலி ஓநாய்கள்
வேற்று வேலியின் பசுத்தோல் தரித்த
சிங்கத் துணையுடன்.
மானம் காக்க முண்டியடித்து
கொம்புகள் உடைய
உயிர்நீத்தன புள்ளி மான்கள்.
குருதி படர்ந்த புல்வெளிகளாய்
மாறியிருந்தன செழித்த வனங்கள்.
புணர்பசி தீர்ந்த ஓநாய்கள்
ஆர்ப்பரித்து தோலுரிக்கத் துவங்கின
எஞ்சியிருந்த மான்களை.
ஓநாய்த் தலைவனின் பிருஷ்டம் விழுந்த
எச்சத்திற்கு விரைந்தோடியது
இன்னும் பசுத்தோல் தரித்த
வேற்று வேலிச் சிங்கங்கள்.

வடு

ஒரு மெல்லிய மழைநாளில்
ஈரம் கசிந்த மனதுடன் காணவந்ததில்
முதல் முத்தமிட்டாய் எனக்கு.
உன் ஈரத்தில் நனைந்து போயிருந்தது
என் அனேக விரல்கள்.
பிறிதொரு நாளில் இரண்டாம் முத்தமிட்டாய்
என்னை காதலிப்பதாகச் சொல்லி.
முழுவதுமாய் கசிந்து போயிருந்தேன்
உன் முத்தத்திற்காய்.
ஏனைய முத்தங்கள் நீ கொடுத்து வந்தாய்
ஏதேதோ காரணங்கள் சொல்லி.
இன்று கடைசி முத்தமென விரைந்து வருகிறாய்
உனக்கு திருமணம் எனச்சொல்லி.

2009/10/12

உயிர்ப்பு


ஒற்றைப்பாறையில் சரியும்
மணல் துகள்களாய் என் மனது.
அதில் ஒட்டிக்கிடக்கும்
நீர்த்திவலைகளாய்
உன் நினைவுகள்.
இருள் நிறைந்த என் வனப்புக்குள்
ஒளியூட்டும் நிலவொளியாய்
உன் குருட்டு புன்னகை.
பாறைகளினூடே பரவும்
ஒற்றை ஒளியாய்
நீ நனைத்துப்போன முத்தங்களில்
திளைக்கிறது எனது உயிர்.

2009/10/11

கனவுகள் சுமக்கும் கருவறை

உயிர் ஜனித்த போதே
கருவறை காணாது
கனவுகள் கண்டவன் நான்.
கனவுத் தொட்டிலாகவே இருந்தது
என் தாயின் கருவறை.
துடிக்கும் எனக்கான இதயத்தை
முதலில் கண்டது விழி.
பிடித்திட எத்தனிக்கையில்
தடுத்துக்கொண்டே இருந்தன
பிணைக்கப்பட்ட என் தொப்புள்கொடி.
அறுத்திட முனைகையில்
கை சுருங்கி ரேகைகள் பதிந்து போயின.
அவள் விரல் தடவிய போது
முத்தத்திற்காய் முந்தியது உதடுகள்.
அனேக கனவுகள் கலைந்தே போயிருந்தது
கருவறை என்னை புறந்தள்ளியதும்.
என்னுள் முளைத்த காதலில்
மீண்டும் கனவுகள் சுமக்கும் கருவறை கிடைத்தது
காதலின் மார்புக்குள் என்னை புதைத்தபோது.


நன்றி: திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=30910157&format=html

விருதா இரவுகள்.

வெயில் உமிழ்ந்துபோன
வெப்பக்காடாய் மாறியிருக்கிறது
என் பழுத்த இரவுகள்.
இடை இடையில் கனவுக் குழந்தைகள்
என் தலை கோதிச் செல்கின்றன.

புணர்ச்சியில் திளைத்திருக்கும் பறவைகள்
எனக்கான உனது பிரிவினை
நினைவூட்டிச் செல்கின்றன.
பிரிவுகளும் இரவுகளும்
மேலும் நெருக்கமடைகின்றன.
இன்றைய இரவினில்
காற்றும் மரக்கிளைகளும் கூட
தனிமைக்கோலம் பூண்டிருக்கின்றன.
அந்த நேரம் பெய்யும் மழைக்கு
ஏனோ என் மனது எதிரியாகி விடுகிறது.
மேலும் மேலும் குழப்ப பிம்பங்கள்
விழி மறைத்தபடியே நகர்கின்றன.
இன்றைய எனது விருதா இரவுகள்
நீண்டுகொண்டே இருக்கின்றன.
உன் ஒற்றை முத்தத்தில்தான்
எனது இரவும் விடியலும்
கலவிகொள்ளப்போகின்றன.

2009/10/10

உன் பிரிவுகள்...

சந்தித்த சிறுவினாடிக்குள்
புன்னகை பரிமாறிக்கொண்டாய்.
சின்ன சின்ன குறும்புகளுக்கு
தலையசைத்தும் விரல்கோதியும்
உடல் வளைத்தும் ஆகிவிட்டது.
பிரியும் நேரம் வந்தவுடன்
சலனமின்றி கையசைத்து
சென்றுவிட்டாய்.
அதுசரி, உன் ஐந்து வயதிற்கா
புரியப்போகிறது எனக்கான
உன் பிரிவினை.

2009/10/09

சிறகிலிருந்து பிரிந்த இறகு...


சலனமற்றுக் கிடக்கும் இன்றைய
இரவுகளின் ஆழம் என்னை
அமளியடையச் செய்கிறது.
நீ இல்லாத இரவு
நட்சத்திரங்கள் இல்லாத
வானமாய் காட்சியளிக்கின்றது.
தனித்திருக்கும் என்னை
உன் நினைவுகள்
ஏனோ பயமுறுத்துகின்றது.
உன் கை கோர்த்து நடந்த இடமெல்லாம்
மௌனம் கலைந்த சிறகுகளாய் மாறிவிட்டது.
உன் கைகள் விட்டுச்
சென்ற ரேகைகளை எல்லாம்
காற்று கலைத்துச் செல்கிறது.
நீ சிந்தும் ஒற்றை புன்னகைக்காய்
எனது இரவு மீட்சியடைகிறது.
துணை தேடி பறக்கும்
பறவையின் சிறகிலிருந்து
பிரிந்த இறகு ஒன்று
என் மேல் விழுந்து கிடக்கிறது.