2009/09/23

டாட்டூ வண்ணத்துப்பூச்சிகள்

எப்படியும் பிடித்துவிடலாம் என்று
விரல்கள் விரைந்தோட அதன் வண்ணத்தை
மட்டும் துப்பிச் செல்லும் வண்ணத்துப்பூச்சி.
முடிந்து விடக்கூடியதாய் இல்லை
அதன் வண்ணப் பாத்திரம்.

உன் சிறகுகளில் தான்
வண்ணங்களை படித்தோம்.
உன் பறத்தலிலும்
ஒரு
மௌனத்தை உணர்ந்தோம்.
நீ தாவும் ஒவ்வொரு இடத்திலும்
உன் நிறம் படிந்து போகும்.
அந்த படிதலுக்காய் என் விரல்கள்
காத்துக் கிடக்கின்றன இன்னமும்.
உன் சிறகின் படபடப்பை
தன் கண் சிமிட்டலால்
செய்து காட்டுவாள் தோழி.

பால்யத்தை கடந்த எனக்கும்
இன்றைய பால்யங்களில் திளைக்கும்
யாவர்க்குமாய் ஒட்டிக் கிடக்கின்றன
டாட்டூ வண்ணத்துப்பூச்சிகள்
தீர்ந்து போன வண்ணப் பாத்திரங்களாய்!!!