2009/02/22

செய்திகள்"திருமணமாகமல் கருவுற்றாள்"
- தலைப்புச் செய்தி

" கரு தறிக்காததால் தத்தெடுத்தாள்"
- பெட்டிச் செய்தி

2009/02/20

இனி அவள் வரட்டும்

மண்ணுக்கு சுவாசம் கொடுக்க
மடிக்கு பெருமை சேர்க்க
ஆணின் அர்த்தத்தை விவரிக்க
"பெண்" எனும் அடைமொழி கொண்டு
கண் விழித்தீர்கள்.


இவள் -

மௌனம் கலைந்த பாலைவனத்தில்
ஊசலாடும் ஒற்றை மலர்.
மலரின் வியர்வைத் துளியில்
முகம் துடைக்கும் கனவுக்காரி.
நிலவினை வெட்கம் கொள்ளச்செய்த
அழகுப் பேய்கள்.
வானை போர்வையாக்கி
மேகத் தலையணையில்
கனவு கண்ட சுதந்திர தேவதைகள்.

நிலவென
மலரென
பூசிக்கப்பட்ட உங்களை
அடைக்கப்போவதோ
வியாபாரச் சிறையில்.

பளிங்கு பாசறையில்
வேட்டையாடப்பட
போகிறவள் இவள்.
மலர் முகத்துடன்
அலங்கரிக்கப்பட்டு
சோதனைச் சாவடியில்
நிற்கப்படுகிறாள்
"ஆண்" எனும்
ஆதிக்கப்பேய்கள் முன்.


ஆண்கள் -

நாள் தவறாது
தரம் பார்க்கும்
தராசு தயாரிக்கும்
நீதிமான்கள்.
இவளின்
முகக் கண்களும்
நகக் கண்களும்
மோதும் வேளையில்
தரம் பார்க்கத் துவங்குகிறான்.
கண்களால்
கன்னி அளக்கிறான்.
அசைந்த ஓவியம்
உயிர் கலைந்து நிற்கிறது.
அசை போடுகின்றான்
அவளின் அங்கத்தை
சீரிய வாள்
உறையில் ஓய்வெடுத்து
கொண்டு இருக்கிறது
காமப் பற்கள் ருசி பார்க்கிறது
ஒவ்வொரு இதழை
சிறகடித்த பறவை
சிறகொடிந்து துடிக்கிறது

ஆண் இனத்தின்
அழுக்கு மூட்டைகளே
காமச் சருகில் குளிர் காயும்
ஆதிக்கச் சிறுத்தைகளே !
தரம் பார்த்து
கோப்பு தயாரிக்கிறீர்களா ?

உன் ஆதிக்க காலுக்கு
செருப்பல்லடா அவள்
உன் தலையின் மகுடம்

உன் சட்டைப்பையின்
சில்லறையல்ல அவள்
உன் இதயத்தின் உயிர்த்துடிப்பு

சாணை தீட்டப்படவில்லை
என்பதற்காக இன்னும்
எத்தனை காலம் உறையிலேயே
வீழ்ந்து கிடக்கப்போகிறீர்கள்

ஆண்கள் -
உங்களை காக்கும்
உறைகளல்ல
அடிமைப்படுத்தும்
உறைகள்.
சாணை தீட்டிக்கொள்ள
தயாராகுங்கள்.
தரம் பார்க்கும்
நீதிமான்களே
இனி
அவளை வரச்சொல்
உன்னை தரம் பார்க்க . . .

2009/02/10

நிழல்


நாம் பின்தொடர்வதும்
நம்மை பின்தொடர்வதுமான
ஒரு வேடிக்கை விளையாட்டு