2009/12/30

பூ

(உரையாடல் கவிதைப் போட்டிக்கான இடுகை)


அழிந்துபோகாத பல வண்ணங்களைக்
கொண்டிருப்பவன் நான்.
மொட்டுகளாய் மொட்டவிழ்ந்ததுமாய்
பல பூக்களையும் சுமந்து
கொண்டிருப்பவன் நான்.
உயிருள்ள பூக்களுக்கிடையே
கண்காட்சியில் எனக்கும்
இடம் உண்டெனினும் சூட்டிக்கொள்ள
விரும்புவதில்லை எவரும்.
ஆசைக்கேனும் பறிக்க எண்ணமற்று
விலகிச்செல்கிறது விரல்கள்.
இசைந்து வரும் காற்றுக்கு
எவ்வளவு
தலையசைத்தும்
மொட்டவிழ்க்கத்தெரியாத என்னிடம்
கலவி கொள்ள முயன்று
தோற்றுக்கொண்டே இருக்கிறது
ஒரு வண்டு.

2009/12/21

Leave me not!!!


Lying idle on your lap
with a sporadically working brain
Tears rolling down my eyes
drenches your toes
Haunting memories in front of my eyes
makes my soul deprive

My Love, breaking you
never gives happiness
My Love, thinking you
never gives sorrows
My Love, leave me not
alone, alone, alone!!!

2009/12/08

பேருந்து நிறுத்தம்

கனவுகள் நெருங்காத பல கனத்த
இரவுகளைச் சுமந்த மறைவுகளற்ற வீடுகளாய்
நடைபாதை குடும்பங்கள்.
அடுத்த வேளை உணவிற்கு
யாசித்து நிற்கும் பல் விழுந்த கிழவன்.
எதையோ பறிகொடுத்து சேருமிடம் தெரியாது
ஒவ்வொரு பேருந்தை வெறித்துப் பார்ப்பவன்.
எவனுடைய சுகத்திற்காய் தன்னை தொலைத்துவிட்டு
கருவில் பாரம் சுமப்பவள்.
கையில் தன் சோக சரிதையை சுமந்து
வேலை தேடும் பட்டதாரி.
நொடிப்பொழுதில் பணம் களவாட
சமயம் பார்க்கும் ஜேப்படிக்காரன்.
நோய் சுமந்து கவனிப்பாரற்று
உயிர் துடிக்கும் நாய்
என ஒரு பேருந்து நிறுத்தம்
பேருந்து நிறுத்தமாக மட்டும் இருப்பதில்லை.

2009/12/04

சுமைதாங்கி

நாலாபுறமும் அடைப்பட்டிருந்த
காவித்துணிக்கு சிறுதுளை
வழியே காற்றூதி
உயிர் பரப்பிக்கொண்டிருந்தாள்
ஒரு மூதாட்டி
தன் தலையின் பாரம் சுமந்திட.

2009/11/27

நட்பு...

குறைந்த ஒளியில்
நடக்கையில்
அதிக ஒளி கொண்டு
தொடரும் நிழல்.

2009/11/23

இறப்பு

தனிமைத்துயர்
விரும்பாத
பறவையொன்று
கூடுபிரிந்து காற்றுடைத்து
வழியெங்கும் இறகு
உதிர்த்துச்செல்கிறது.

2009/11/02

கரிப்பு

இருள் படர்ந்த கரிசல் மணலில்
வினோத ஒலி எழுப்பும் காற்று
என் மனதின் ஆழ்ந்த நிசப்தத்தை
சற்றே சலனப்படுத்திச் செல்கிறது.
பேருந்தின் கண்ணாடி சன்னலில்
கசிந்தொழுகும் மழைத்துளி
என் நினைவுகளை களவாடுகிறது.
எவளுடைய கண்ணீரையோ
சுமந்த சன்னல் கம்பிகள்
அதன் கரிப்பை எனக்குள்
புகுத்திக் கொண்டே இருக்கிறது.

2009/10/29

தேய்பிறைப் பொழுதுகள்

1. உன் பாதச்சுவட்டில்
இதயம் நட்டுவைத்தேன்
மிதித்து மீண்டும் சுவடாக்கினாய்
எஞ்சிய உயிரையும்
நட்டுவைக்கிறேன்.

2. நீ
நட்டுவைத்த செடியில்
பூ பூக்க மறுக்கிறது
என் கண்ணீரை
ஊற்றியபோதும்.

3. உன் அழைப்பிற்கு
காத்திருக்கையில்
நீ மட்டும்
அழைப்பதேயில்லை

4. நான் வசிப்பது
உன் ஒற்றைப் புன்னகையில்
நீ வசிப்பது
என் கண்ணீர்த் துளிகளில்

5. மனமின்றித் தான்
பிரிந்தேன்
மனதை உன்னிடம்
கொடுத்துவிட்டு.

6. நீ கண்பார்க்கும்
வேளையில்
நான் தொலைந்து போகிறேன்.

7. பூக்களைச்
சுற்றும் வண்டு
உன்னைச்
சுற்றும் நான்.

8. உனக்கு
மழையைப் பிடிப்பதனால்
மழை
விரும்பாதவன் நான்.

9. நான்
அழுதாலும் சிரித்தாலும்
மௌனம் மட்டுமே
உன் பதிலாய்
இருக்கிறது.

10. பொன்மொழிகளுடன்
உறங்கச் சொல்லி வருகிறது
உன் குறுஞ்செய்தி
அதற்குப் பின்
நான் எங்கே உறங்குவது.

2009/10/25

துளி

கவிதை -
ஒரு
துளியில்
இணையும்
இன்னொரு
துளி.

அற்றல்

கொடுத்துத் தீர்ந்த
கையோடு
யாசகம் கேட்டு வந்த
வயோதிகனிடம்
"இல்லை" என
பலமுறை சொல்லியும்
புரிந்ததாகத் தெரியவில்லை
பணம் தர
என்னிடம் மனம்
இல்லையென்பது.

2009/10/24

எச்சம்

அடர் மரமும் பழுத்த காய்களும்
படர் புல்வெளியுமாய்
செழித்திருந்த வனத்துக்குள்
வேலி தாண்டாமல்
தன்னிடத்தே வாழ்ந்து
துள்ளித் திரிந்தன புள்ளி மான்கள்.
செழித்த வனத்துக்குள்
வன்புணர் தரிக்க எத்தனித்தன
இவ்வேலி ஓநாய்கள்
வேற்று வேலியின் பசுத்தோல் தரித்த
சிங்கத் துணையுடன்.
மானம் காக்க முண்டியடித்து
கொம்புகள் உடைய
உயிர்நீத்தன புள்ளி மான்கள்.
குருதி படர்ந்த புல்வெளிகளாய்
மாறியிருந்தன செழித்த வனங்கள்.
புணர்பசி தீர்ந்த ஓநாய்கள்
ஆர்ப்பரித்து தோலுரிக்கத் துவங்கின
எஞ்சியிருந்த மான்களை.
ஓநாய்த் தலைவனின் பிருஷ்டம் விழுந்த
எச்சத்திற்கு விரைந்தோடியது
இன்னும் பசுத்தோல் தரித்த
வேற்று வேலிச் சிங்கங்கள்.

வடு

ஒரு மெல்லிய மழைநாளில்
ஈரம் கசிந்த மனதுடன் காணவந்ததில்
முதல் முத்தமிட்டாய் எனக்கு.
உன் ஈரத்தில் நனைந்து போயிருந்தது
என் அனேக விரல்கள்.
பிறிதொரு நாளில் இரண்டாம் முத்தமிட்டாய்
என்னை காதலிப்பதாகச் சொல்லி.
முழுவதுமாய் கசிந்து போயிருந்தேன்
உன் முத்தத்திற்காய்.
ஏனைய முத்தங்கள் நீ கொடுத்து வந்தாய்
ஏதேதோ காரணங்கள் சொல்லி.
இன்று கடைசி முத்தமென விரைந்து வருகிறாய்
உனக்கு திருமணம் எனச்சொல்லி.

2009/10/12

உயிர்ப்பு


ஒற்றைப்பாறையில் சரியும்
மணல் துகள்களாய் என் மனது.
அதில் ஒட்டிக்கிடக்கும்
நீர்த்திவலைகளாய்
உன் நினைவுகள்.
இருள் நிறைந்த என் வனப்புக்குள்
ஒளியூட்டும் நிலவொளியாய்
உன் குருட்டு புன்னகை.
பாறைகளினூடே பரவும்
ஒற்றை ஒளியாய்
நீ நனைத்துப்போன முத்தங்களில்
திளைக்கிறது எனது உயிர்.

2009/10/11

கனவுகள் சுமக்கும் கருவறை

உயிர் ஜனித்த போதே
கருவறை காணாது
கனவுகள் கண்டவன் நான்.
கனவுத் தொட்டிலாகவே இருந்தது
என் தாயின் கருவறை.
துடிக்கும் எனக்கான இதயத்தை
முதலில் கண்டது விழி.
பிடித்திட எத்தனிக்கையில்
தடுத்துக்கொண்டே இருந்தன
பிணைக்கப்பட்ட என் தொப்புள்கொடி.
அறுத்திட முனைகையில்
கை சுருங்கி ரேகைகள் பதிந்து போயின.
அவள் விரல் தடவிய போது
முத்தத்திற்காய் முந்தியது உதடுகள்.
அனேக கனவுகள் கலைந்தே போயிருந்தது
கருவறை என்னை புறந்தள்ளியதும்.
என்னுள் முளைத்த காதலில்
மீண்டும் கனவுகள் சுமக்கும் கருவறை கிடைத்தது
காதலின் மார்புக்குள் என்னை புதைத்தபோது.


நன்றி: திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=30910157&format=html

விருதா இரவுகள்.

வெயில் உமிழ்ந்துபோன
வெப்பக்காடாய் மாறியிருக்கிறது
என் பழுத்த இரவுகள்.
இடை இடையில் கனவுக் குழந்தைகள்
என் தலை கோதிச் செல்கின்றன.

புணர்ச்சியில் திளைத்திருக்கும் பறவைகள்
எனக்கான உனது பிரிவினை
நினைவூட்டிச் செல்கின்றன.
பிரிவுகளும் இரவுகளும்
மேலும் நெருக்கமடைகின்றன.
இன்றைய இரவினில்
காற்றும் மரக்கிளைகளும் கூட
தனிமைக்கோலம் பூண்டிருக்கின்றன.
அந்த நேரம் பெய்யும் மழைக்கு
ஏனோ என் மனது எதிரியாகி விடுகிறது.
மேலும் மேலும் குழப்ப பிம்பங்கள்
விழி மறைத்தபடியே நகர்கின்றன.
இன்றைய எனது விருதா இரவுகள்
நீண்டுகொண்டே இருக்கின்றன.
உன் ஒற்றை முத்தத்தில்தான்
எனது இரவும் விடியலும்
கலவிகொள்ளப்போகின்றன.

2009/10/10

உன் பிரிவுகள்...

சந்தித்த சிறுவினாடிக்குள்
புன்னகை பரிமாறிக்கொண்டாய்.
சின்ன சின்ன குறும்புகளுக்கு
தலையசைத்தும் விரல்கோதியும்
உடல் வளைத்தும் ஆகிவிட்டது.
பிரியும் நேரம் வந்தவுடன்
சலனமின்றி கையசைத்து
சென்றுவிட்டாய்.
அதுசரி, உன் ஐந்து வயதிற்கா
புரியப்போகிறது எனக்கான
உன் பிரிவினை.

2009/10/09

சிறகிலிருந்து பிரிந்த இறகு...


சலனமற்றுக் கிடக்கும் இன்றைய
இரவுகளின் ஆழம் என்னை
அமளியடையச் செய்கிறது.
நீ இல்லாத இரவு
நட்சத்திரங்கள் இல்லாத
வானமாய் காட்சியளிக்கின்றது.
தனித்திருக்கும் என்னை
உன் நினைவுகள்
ஏனோ பயமுறுத்துகின்றது.
உன் கை கோர்த்து நடந்த இடமெல்லாம்
மௌனம் கலைந்த சிறகுகளாய் மாறிவிட்டது.
உன் கைகள் விட்டுச்
சென்ற ரேகைகளை எல்லாம்
காற்று கலைத்துச் செல்கிறது.
நீ சிந்தும் ஒற்றை புன்னகைக்காய்
எனது இரவு மீட்சியடைகிறது.
துணை தேடி பறக்கும்
பறவையின் சிறகிலிருந்து
பிரிந்த இறகு ஒன்று
என் மேல் விழுந்து கிடக்கிறது.

2009/09/23

டாட்டூ வண்ணத்துப்பூச்சிகள்

எப்படியும் பிடித்துவிடலாம் என்று
விரல்கள் விரைந்தோட அதன் வண்ணத்தை
மட்டும் துப்பிச் செல்லும் வண்ணத்துப்பூச்சி.
முடிந்து விடக்கூடியதாய் இல்லை
அதன் வண்ணப் பாத்திரம்.

உன் சிறகுகளில் தான்
வண்ணங்களை படித்தோம்.
உன் பறத்தலிலும்
ஒரு
மௌனத்தை உணர்ந்தோம்.
நீ தாவும் ஒவ்வொரு இடத்திலும்
உன் நிறம் படிந்து போகும்.
அந்த படிதலுக்காய் என் விரல்கள்
காத்துக் கிடக்கின்றன இன்னமும்.
உன் சிறகின் படபடப்பை
தன் கண் சிமிட்டலால்
செய்து காட்டுவாள் தோழி.

பால்யத்தை கடந்த எனக்கும்
இன்றைய பால்யங்களில் திளைக்கும்
யாவர்க்குமாய் ஒட்டிக் கிடக்கின்றன
டாட்டூ வண்ணத்துப்பூச்சிகள்
தீர்ந்து போன வண்ணப் பாத்திரங்களாய்!!!

2009/08/18

ஊசி விற்பவன்

நேராக சில
வளைந்ததாக சில
கூராக சில
தட்டையாக சில என
இருபது ஊசிகள்
ஐந்து ரூபாய் என்றான்.
இப்படி எத்தனையோ இருபதுகள்
அவன் கைகளில்.

மழை பெய்யும் குடை
சில்லறை இழக்கும் பணப்பை
கை தூக்க தெரியும் கக்கம்
என நம் கிழிந்துபோன
அவமானங்களை தைத்து மறைக்கும்
அவன் ஊசி.

நெரிசலில் சிக்கி
இருக்க இடமல்லாது
கை உதிர்த்து எவன் காலுக்கடியிலோ
சிக்கிக் கொள்ளும் ஒரு ஊசி.

புகை வண்டியின் அடுத்த நிறுத்தத்திற்கான
பல கால்கள் நகர்ந்து செல்லும்
அவன் கைகள் தடவிக் கொண்டிருக்கும்
மீதமுள்ள கால்களை.


நன்றி: கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=418:2009-09-11-00-13-42&catid=2:poems&Itemid=88

2009/08/09

கேணி - இலக்கியமும் சினிமாவும்...

சிறுவயதில் கதை, கவிதைகள் எழுதத் தொடங்கி ஒரு எழுத்தாளராக தன் வாழ்கையை தொடங்கி பின் தனது இரண்டாம் காதலான சினிமாவில் ஒரு ஒளிப்பதிவாளராகவும், தமிழ் சினிமாவின்ஆத்மார்த்த இயக்குனர்களில் ஒருவரான திரு. பாலு மகேந்திரா, இந்த மாதக் கேணியின் நீரூற்று.

இது கேணியில் நடக்கும் மூன்றாம் சந்திப்பு.
முதல் சந்திப்பில் எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் இரண்டாம் சந்
திப்பில் எழுத்தாளர் திரு. பிரபஞ்சன் கலந்து கொண்டனர். திரு. பாலு மகேந்திரா எழுத்திற்கும் சினிமாவிற்கும் சொந்தக்காரர் என்பதால் "இலக்கியமும் சினிமாவும்" என்னும் தலைப்பில் கலந்துரையாடல் துவங்கியது.

திரு. பாலு மகேந்திராவின் பேச்சிலிருந்து...

தன் பயிற்சிப்பள்ளியல் பயில வரும் ஒவ்வொரு
இளைஞர்களிடமும் தான் கேட்கும் முதல் கேள்வி
" கடைசியாக நீங்கள் வாசித்த சிறுகதை என்ன ? " என்பதிலிருந்தே சினிமாவும் இலக்கியமும் எவ்வாறு பிணைக்கப்பட்டுள்ளது என்பது புரிகிறது.

எழுத்தும் சினிமாவும் இரு பெரும் ஊடகங்களாக விளங்குகிறது. எந்த வடிவத்தின் (எழுத்து, ஓவியம், சினிமா...) படைப்புடனும் இரு விஷயங்கள் கண்டிப்பாக அமைந்திருக்கும். ஒன்று உருவம் (Form) இன்னொன்று உள்ளடக்கம் (Content). உள்ளடக்கம் என்பது ஒரு படைப்பின் பொருள், உருவம் என்பது படைக்கப்பட்ட விதம்/வடிவம். உதாரணமாக சிலுவையில் அறையப்பட்ட ஏசுவின் ஓவியம் மற்றும் அந்த ஓவியம் வரையப்பட்ட விதம். ஒரு அற்புதமான உள்ளடக்கமும் உருவமும் பிண்ணி பிணைக்கப்பட்டு காலத்தால் அழியாது பாதுகாகப்படுமேயானால் அதுவே ஒரு உன்னதமான படைப்பு - A Masterpiece. (உ.ம். "பாட்டி வடை சுட்ட" கதை போல).

மேலும், ஒரு எழுத்தாளரின் ஆற்றலை மதிப்பிடும் பொழுது அந்த படைப்புசொல்லப்பட்ட விதமும் அவசியமான ஒன்றாகும். அந்த எழுத்தாளரின் சிறந்த படைப்பின் மூலம் அவரைமதிப்பிட வேண்டுமே தவிர அவரின் அரைகுறை பிரசவங்களை வைத்துமதிப்பிடுதல் தவறான முறையாகும்.
The work of a Master need not be a Masterpiece everytime.

ஒரு எழுத்தை சினிமாவாக ஊடக மாற்றம் செய்ய விளையும் பொது அந்த எழுத்தில் உள்ள அனைத்தையும் எடுத்து செல்லுதல் முடியாத ஒன்றாகும். எழுத்திற்கு உள்ள நடையும்/மொழியும் சினிமாவிற்கு உள்ள மொழியும் வேறுபட்ட ஒன்று. இதுவே சினிமாவிற்கு ஒரு பெரும் சவாலாக விளங்குகிறது. ஊடக மாற்றத்தின் பொழுது சில நேரங்களில் மொழியின் நடை/பயன்பாடு மாறுபடலாம். சில நேரங்களில் எழுத்தால் விவரிக்க முடியாததை சினிமாவில் விவரிக்க முடியலாம்.

ஒரு எழுத்தாளனை எழுதத் தூண்டிய/பாதித்த விஷயம், ஒரு இயக்குனரையும்/படைப்பாளனையும் பாதித்திருந்தால்
மட்டுமே அந்த படைப்பின் பாதிப்பை/கருவை ஊடக மாற்றம் செய்ய எடுத்துக்கொள்ளவேண்டும். It is not necessary to take the whole story, but take the thing which made him to write.

திரு. மாலன் அவர்களின் "தப்புக்கணக்கு" என்னும் சிறுகதையை தான் ஊடக மாற்றம் செய்ய விளைந்ததையும் அந்த சிறுகதையை திரு. ஞானி மூலம் வாசிக்கக் கேட்டு பெற்றுக்கொண்டோம். பின் அந்த சிறுகதையின் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு தான் குறும்படமாக மாற்றிய அனுபவத்தையும் விளக்கினார்.

பின், திரு. பாலு மகேந்திராவுடன் எங்களின் கலந்துரையாடல் துவங்கி, அதன் முடிவில் திரு. மாலனின் சிறுகதையைத் தழுவி தான் படைத்த "தப்புக்கணக்கு" குறும்படம்திரையிடப்பட்டது. அதன் முடிவில், திரு. மாலனின் எழுத்தை தான் கையாண்டவிதமும் மாற்றி அமைத்த வடிவத்தையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.தனது பேச்சின் பொழுது சினிமாவில் "திரைக்கதைஎழுத்தாளர்களின்" (The Absence of Movie Script Writer's) இல்லாமையைக் கருதி பெரிதும் கவலை கொண்டு இன்றைய இளைஞர்கள் திரைக்கதை எழுத்தாளர்களாகவும் (Film Script Writing) உருவாக வேண்டும் என்னும் தனது ஆசையை வெளிப்படுத்திக் கொண்டார்.

2009/07/25

என் அப்பா மிகவும் நல்லவர்.

என் அப்பா மிகவும் நல்லவர்.
சில சமயம் மட்டும்
கோபம் கொள்வார்.
சில கோபங்களில் மட்டும்
புகை இழுப்பார்.
கடுஞ்சொல் அவ்வளவு
வீசமாட்டார்.
கோபத்தின் பொருட்டு
ஒருசில வார்த்தைகள்
மட்டும் வெளியில் வருவதுண்டு.
என் அக்காவிடம் மட்டும்
பேசியதேயில்லை இதுவரை.
எனினும் என் அப்பா மிகவும் நல்லவர்.

சுவர் அழுக்கு துடைக்க அவரின்
கறை படிந்த பனியனை மட்டுமே உபயோகிப்பார்.
அழிக்க முடியாத கறைகளுள் அவர்
துப்பிய வெற்றிலைக் கறைகளும் உண்டு.
மாற்று பனியன் வைத்திருந்ததாய்
எனக்கு நினைவில்லை.
ஆயினும் என் அப்பா மிகவும் நல்லவர்.

என் அம்மாவின் கசிந்த சேலையை
உடனே அப்புறப்படுத்தி விடுவார்.
என்றோ ஒரு வேளை அரிசிச்சோறு இருக்கும் சமயம்
அவர் மட்டும் திடீர் உண்ணா நிலை கொள்வார்.
நாங்கள் சாப்பிடுவதற்கு முன்னமே அவர்
சாப்பிட்டதாய் ஒரு நாளும் இல்லை.
முன்வாசலில் அவர் உறங்கும் கயிற்றுக்கட்டிலில்
எங்களை நெருங்க விட்டதுமில்லை.
அக்குள் கிழிந்த சட்டையும்
அழுக்கு படிந்த வேட்டியுமே
அவரின் மேலாடைகள்.

பளிங்குத் தரையில்
மெத்தை விரிப்பில்
குளிரூட்டிய அறைக்குள்
இன்று நாங்கள் படுத்திருந்தாலும்
அவரின் உறக்கம் இன்றும்
முன்வாசலின் கயிற்றுக் கட்டிலில்தான்.
ஆம், என் அப்பா மிகவும் நல்லவர்.


2009/06/14

கேணி - ஒரு இலக்கிய சந்திப்பு

எழுத்தாளர், பத்திரிகையாளர் ஞாநி அண்மையில் குடிபெயர்ந்த கேகேநகர் வீட்டில் நடந்த ஒரு இலக்கிய கலந்துரையாடல்.
அவர் வீட்டின் பின்புறம் அமைந்திருந்த இயற்கையான சூழல் தான் (மூடப்பட்டிருந்த கிணறும் அதன்மேல்சூழ்ந்திருந்த மரத் தோட்டமும்) இந்த "கேணி" இலக்கிய கூட்டம் உருவாவ
தற்கான மூலம். இந்த ஒரு அழகிய சூழலை இளைய தலைமுறை எழுத்தாளர்களையும், வாசகர்களையும் ஊக்குவிக்கும் தளமாக பயன்படுத்தவும் எண்ணி அமைந்ததே இந்த "கேணி" என்பது திரு. ஞாநியின் கூற்று.
தொடக்கமாக எனது விருப்பத்திற்குரிய எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் தனக்கு பிடித்தசிறுகதைகளை பற்றி பேசினார்.


நான் கலந்து கொள்ளும் முதல் இலக்கிய கூட்டம் இதுவென்பதால் "ஆர்வத்தை" பற்றி சொல்லவே வேண்டாம். கூடவே சொல்ல முடியாத சிறு தய
க்கமும் இருந்து கொண்டு தான் இருந்தது.
இன்றைய ஞாயிற்றின் வெப்பம் தணிந்த மாலை பொழுதில் பல இளைஞர்களின் (இருபாலரும்) படை சூழ கூட்டம் இனிதே துவங்கியது.

திரு. எஸ். ராமகிருஷ்ணன் தனக்கு பிடித்தசிறுகதைகளை தனக்கேயுரிய நடையில் கதை சொல்ல ஆரம்பித்தார். புதுமைபித்தன், முஹம்மத் பஷீர் போன்றவர்களின் சிறுகதையில் துவங்கி மேலும் பலரின் சிறுகதைகளில் நீண்டுகொண்டே போனது. எனது பால்ய வயதில் தாத்தா பாட்டியோடு முடிந்த எனது கதை கேட்டல் இன்று எனது இளமை பருவத்தில் மீண்டும் முளை விட்டது.

சுமார் இரண்டறை மணி நேரம் நீடித்த பிறகு (இடையில் நாவிற்கும் ருசியாக சுண்டலும் தேநீரும் சேர்ந்து), திரு. எஸ். ராமகிருஷ்ணன் வுடன் எங்களின் கலந்துரையாடலுடன் கூட்டம் சுமார் ஏழு மணியளவில் இனிதே முடிந்தது.
இது நிச்சயம் இன்றைய இளைய படைப்பாளிகள், வாசகர்கள் பயணிக்க வேண்டிய ஒரு தளமாக அமையும் என்பதில் ஆச்சரியம் இல்லை.
ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிற்று கிழமைகளில் இந்த கூட்டம் நடைபெறும். இன்னும் பல இளைஞர்கள் (இருபாலரும்) கலந்து கொண்டு தங்களின் இலக்கிய சிந்தனைகளை விரிவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பமும்.
நன்றி...

2009/06/02

அவனும்... இவனும்...

குளிரூட்டிய அறைக்குள் அடைந்துகொண்டு
இரவும் பகலும் வித்தியாசமின்றி வேலை செய்து
வார இறுதியில் கிடைத்த பொருளை
உயர்தர விடுதியில் பருக்கைகளை பொரிப்பவனும்

இயற்கையின் நிழல்களாய் வீதி அலைந்து
செய்வதறியாது அடுத்து வேலைக்கான
பருக்கைகளைத் தேடி
குப்பைத்தொட்டி தேடுபவனும்

அவனுக்கு அது சொர்க்கம் என்றால்
இவனுக்கு இது சொர்க்கம்.

சவலை


மாதம் ஒரு முறையேனும்
வெளிநாடு பறந்திருக்க
இரவு வெளிச்சத்தில் இருள்
நோக்கி ஆடை களைத்திருக்க
பல திடல்களில் வான் நோக்கி
சிக்சர்கள் மிதந்திருக்க
அப்பாவிகளை வியர்வையில் நனைத்து
பின்னிருந்து தோலை சுரண்டிருக்க
ஏன் அவன் மட்டும்
சோற்றுப்பருக்கையைத் தேடி
குப்பைதொட்டிக்கு அலைகின்றான்?

2009/05/20

பிரிவு!!!

பற்றிய கரங்கள்
விட்டுச் சென்றன
உன் ரேகைகள்
என்னிடத்தில் ...

2009/05/19

சமர்ப்பணம்


தீப்பந்தங்களை
எரிய விட்டுத்தான்
தீக்குச்சி
அணைந்து போகிறது

Haiku... (Japanese)

真夏の暑さ
人山の中
紙が歌

தமிழில்...

கோடை வெயில்
கூட்டத்தின் நடுவில்
காகிதத்தின் சத்தம்.

2009/05/18

இழப்பு


ஈன்ற பிள்ளை இழந்தோம்
துயர் நீக்கிய கணவன் இழந்தோம்
மரம் இழந்தோம் தென்றலும் இழந்தோம்
வீடு இழந்தோம் உறவு இழந்தோம்
பசி இழந்தோம் தூக்கம் இழந்தோம்
கை இழந்தோம் கால் இழந்தோம்
நேசம் இழந்தோம் தேசமும் இழந்தோம்
வயிறும் உயிரும்
இழக்கமுடியாமல் இருக்கிறோம்
அ(கதி)டிமைகளாய் !!!

2009/04/02

தவிப்பு !ஒரு ரயில் பயணத்தின் போது...

வைகறைப் பொழுதின் இருள் கடந்து போய்
வெளிச்ச பிம்பங்கள் முளைத்தெழ
சாளரம்
வழியே -
வெண் பனிக்காற்று முகம் துடைக்க
கருவானம் வெண்பனியில் உறைந்து கிடக்க
புல்லின் மீது பனித்துளிகள் படர்ந்து கிடக்க
அதன் மீது ஞாயிற்றின் செங்கதிர்கள் சுட்டெரிக்க
மரக்கிளைகள் பூத்து குலுங்க
தென்னங்கன்றுகள்
குதூகலிக்க

எதிர் சன்னலோரத்தின் இளம் பெண்ணின்
காது மடல்களின் ஆடலுக்கு காற்று அசைந்திட
தந்தை வயதில் அருகிலிருப்பவர்
உறக்கத்தில் என் தோள் சாய்ந்திட
பனியில் உறைந்துபோய் உறங்கி கிடக்கும்
மழலை விழி திறந்திட

நான் கண்டு சிலிர்த்துப் போயி
கவிதை எழுதிட முனைகையில்
என் பேனா மை தீர்ந்துவிட !!!

2009/02/22

செய்திகள்"திருமணமாகமல் கருவுற்றாள்"
- தலைப்புச் செய்தி

" கரு தறிக்காததால் தத்தெடுத்தாள்"
- பெட்டிச் செய்தி

2009/02/20

இனி அவள் வரட்டும்

மண்ணுக்கு சுவாசம் கொடுக்க
மடிக்கு பெருமை சேர்க்க
ஆணின் அர்த்தத்தை விவரிக்க
"பெண்" எனும் அடைமொழி கொண்டு
கண் விழித்தீர்கள்.


இவள் -

மௌனம் கலைந்த பாலைவனத்தில்
ஊசலாடும் ஒற்றை மலர்.
மலரின் வியர்வைத் துளியில்
முகம் துடைக்கும் கனவுக்காரி.
நிலவினை வெட்கம் கொள்ளச்செய்த
அழகுப் பேய்கள்.
வானை போர்வையாக்கி
மேகத் தலையணையில்
கனவு கண்ட சுதந்திர தேவதைகள்.

நிலவென
மலரென
பூசிக்கப்பட்ட உங்களை
அடைக்கப்போவதோ
வியாபாரச் சிறையில்.

பளிங்கு பாசறையில்
வேட்டையாடப்பட
போகிறவள் இவள்.
மலர் முகத்துடன்
அலங்கரிக்கப்பட்டு
சோதனைச் சாவடியில்
நிற்கப்படுகிறாள்
"ஆண்" எனும்
ஆதிக்கப்பேய்கள் முன்.


ஆண்கள் -

நாள் தவறாது
தரம் பார்க்கும்
தராசு தயாரிக்கும்
நீதிமான்கள்.
இவளின்
முகக் கண்களும்
நகக் கண்களும்
மோதும் வேளையில்
தரம் பார்க்கத் துவங்குகிறான்.
கண்களால்
கன்னி அளக்கிறான்.
அசைந்த ஓவியம்
உயிர் கலைந்து நிற்கிறது.
அசை போடுகின்றான்
அவளின் அங்கத்தை
சீரிய வாள்
உறையில் ஓய்வெடுத்து
கொண்டு இருக்கிறது
காமப் பற்கள் ருசி பார்க்கிறது
ஒவ்வொரு இதழை
சிறகடித்த பறவை
சிறகொடிந்து துடிக்கிறது

ஆண் இனத்தின்
அழுக்கு மூட்டைகளே
காமச் சருகில் குளிர் காயும்
ஆதிக்கச் சிறுத்தைகளே !
தரம் பார்த்து
கோப்பு தயாரிக்கிறீர்களா ?

உன் ஆதிக்க காலுக்கு
செருப்பல்லடா அவள்
உன் தலையின் மகுடம்

உன் சட்டைப்பையின்
சில்லறையல்ல அவள்
உன் இதயத்தின் உயிர்த்துடிப்பு

சாணை தீட்டப்படவில்லை
என்பதற்காக இன்னும்
எத்தனை காலம் உறையிலேயே
வீழ்ந்து கிடக்கப்போகிறீர்கள்

ஆண்கள் -
உங்களை காக்கும்
உறைகளல்ல
அடிமைப்படுத்தும்
உறைகள்.
சாணை தீட்டிக்கொள்ள
தயாராகுங்கள்.
தரம் பார்க்கும்
நீதிமான்களே
இனி
அவளை வரச்சொல்
உன்னை தரம் பார்க்க . . .

2009/02/10

நிழல்


நாம் பின்தொடர்வதும்
நம்மை பின்தொடர்வதுமான
ஒரு வேடிக்கை விளையாட்டு

2009/01/24

கிளிஞ்சல்களாய்...

பெண்ணை சிப்பியென
நினைத்ததனால்
பெருமை கொண்டேன்
ஆண்மகனை

முத்துக்களை மட்டும்
பறித்துவிட்டு
கிளிஞ்சல்களாய்
ஆக்கினீரே!

தனிமை

அடர்ந்த காடு
பாதங்கள் உரசுகையில்
இலையின் சத்தம் .

சர்வர்

எல்லா இலைகளும்
எச்சிலான பிறகுதான்
இவர்களின் இலைகள்
துளிர்கின்றன ...

2009/01/20

முதல் காதல்


மீசை வைத்த
பாரதியை
காதலித்தேன்

மீசை
முளைக்காத
வயதில்...